8

http://www.udumalai.com/p_images/main_thumb/jothidam-puriyatha-puthir-20031.jpg

நடிகர் ராஜேஷ். தமிழ்த் திரையுலகின் முக்கியமான, தனித்துவமிக்க கலைஞர். பல வெற்றிப் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். பட்டுக்கோட்டை அருகே ஒரு சாதாரண கிராமத்தில் பிறந்து, ஆசிரியராகப் பணியில் சேர்ந்து, நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் கலைஞராக உயர்ந்தவர். நடிகராக மட்டுமல்லாது சிறந்த தொழிலதிபராகவும் வெற்றிக் கொடி நாட்டியவர். முக்கியமாக ஈ.வெ.ரா பெரியாரின் கொள்கைகள் மீது பற்றுக் கொண்டவர். கம்யூனிசச் சிந்தனைகளில் நாட்டம் கொண்டவர். உலக, அரசியல் வராலாறுகளை விரல் நுனியில் வைத்திருப்பவர். பல்துறை வல்லுநர். பல நூல்களின் ஆசிரியரும் கூட. அவர் முன்பு தினமணியில் எழுதி வந்த ”முரண்சுவை” தொடர் மிகவும் புகழ்பெற்றது. பல லட்சம் வாசகர்களால் படிக்கப்பட்டு பிரபலங்களின் பாராட்டைப் பெற்ற தொடர் அது.

ராஜேஷ், சிறந்த ஆராய்ச்சியாளரும் கூட. ஜோதிடம், வானியல், பிரபஞ்சத்தின் தோற்றம் என்று பல துறைகளில் மிக விரிவான ஆய்வுகளைச் செய்திருப்பவர். குறிப்பாக, ஜோதிடம், நாடி ஜோதிடம், கை ரேகை ஜோதிடம் என்று ஜோதிடத்தின் பல பிரிவுகளிலும் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வுகள் செய்திருக்கிறார். பல ஜோதிடர்களைச் சந்தித்தும், ஜோதிடம் பார்த்த பிரபலம் முதல் சாதாரணர்கள் வரையிலானவர்களைக் கண்டு விவரங்கள் சேகரித்தும் அனுபவம் பெற்றிருக்கிறார். ஜாதக அலங்காரம் உட்பட பல ஜோதிட நூல்கள், விதிகள், பாடல்கள் இவருக்கு மனப்பாடம். இவ்வாறு தான் கற்றறிந்த விஷயங்களை தற்போது இவர் ’ஜோதிடம் புரியாத புதிர்’ என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டிருக்கிறார்.

தான் கண்டறிந்த, பார்த்த, சேகரித்த உண்மைகள் தன்னோடு மறைந்து விடக் கூடாது என்பதற்காகவே இந்தத் நூலை எழுதியிருப்பதாகக் கூறும் ராஜேஷ், ஜோதிடம் என்பதை உண்மை என்று நிரூபிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் எழுதவில்லை என்றும், அதற்கு எந்தவித அவசியமும் தனக்கு இல்லை என்றும், உண்மையை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இதை எழுதியிருப்பதாகவும் கூறுகிறார்.

”எது உண்மை என்பதைத் தேடுவதில் எனக்கு சிறுபிள்ளையில் இருந்தே ஆர்வம் இருக்கிறது. …. ஜோதிடம் பொய், கடவுள் இல்லை என்று கூட பலமணி நேரம் பேசலாம். அதற்கு முக்கியம் நம்முடைய அறிவும், அனுபவமும், ஆராய்ச்சித் திறனுமாகும். ஆனால், ஜோதிடத்தில் உண்மையைத் தேட வேண்டும் என்பதே எனது நோக்கம்” என்று சொல்லும் ராஜேஷ், “சகலவிதமான சந்தேக பார்வைகளுடன்தான் முதலில் நான் ஜோதிடத்தை அணுகினேன். அதில் உண்மை இல்லை என்று தெரிந்திருந்தால் அப்போதே ஜோதிடத்தை விட்டு விலகிச் சென்றிருப்பேன். ஆனால் அணுகிய என்னை அது தன்னுள் ஈர்த்துக் கொண்டது. காரணம் அதில் உண்மை இருந்தது தான்.

நான் அறிந்த உண்மைகளை என் அனுபவங்களை எனக்கு பின் வருபவர்களும் தெரிந்து கொள்ளவேண்டும் என்று இந்நூல் வடிவில் ஆவணப்படுத்தியிருக்கிறேன். என்னுடைய அனுபவங்களைப் படிப்பவர்கள் ஜோதிடத்துறையில் நூறு ஆண்டுகள் செலவு செய்ததைப் போன்ற உணர்வைப் பெறலாம். ஒவ்வொரு அனுபவமும் படிப்பவர்களை வியப்பில் ஆழ்த்தும் என நம்புகிறேன்.” என்கிறார், நூலின் முன்னுரையில்.

மேலும் அவர், “நம் நாட்டில் பலர் வெளியே இப்படிப் பகுத்தறிவு வேஷம் போட்டுக்கொண்டு திரைமறைவில் ஜோதிடம் பார்த்து பரிகாரம், பூஜை, யாகம் என்றெல்லாம் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். எனக்கு அப்படிப் போலியான பகுத்தறிவு முகமூடியை அணிவதற்கு விருப்பமில்லை. என் பகுத்தறிவுக்கு ஜோதிடம் உண்மையென்று விளங்குகிறது. எனவே அதன் சார்பாக நான் பேசுகிறேன்” என்கிறார்.

ஆம், உண்மையை, பாரபட்சமற்று, விருப்பு, வெறுப்பற்று உண்மையாகவே நாம் தேட ஆரம்பிக்கும் போது, அந்த உண்மை நம் கண்முன்னால் பரந்து விரிந்து தன்னைப் பார் என்று காட்டும். அவ்வாறு உணரும் உண்மையை, விருப்பு, வெறுப்பற்று மக்கள் முன் வைப்பவனே உண்மையான ஆராய்ச்சியாளன். அவ்வகையில் ராஜேஷ் ஒரு சிறந்த ஆராய்ச்சியாளர்.

நூலில் அவர் கூறியிருக்கும் சில தகவல்கள் நம்மை மிகவும் ஆச்சரியப்பட வைப்பதாகும்.

வெங்கட்ராம ஐயர் என்பவர் ஒரு ஜோதிடர். அவரை ராஜேஷ் ஒருமுறை சந்திக்கிறார். ஜோதிட ஆலோசனை கேட்கிறார். பின்னர் ஒரு சமயம் வந்து தம்மைச் சந்திக்குமாறு கூறுகிறார் ஐயர். அதன்படி ராஜேஷ் சென்று பார்க்கும் போது, வெங்கட்ராம ஐயர், ராஜேஷிடம், “1990ல், அக்டோபர் 22 அன்று மதியம் இரண்டு மணியிலிருந்து மூன்று முப்பதுக்குள் உனது வீட்டில் தீ விபத்து நடக்கும்” என்கிறார். கேட்டதும் ராஜேஷிற்கு ஒரே அதிர்ச்சி.

ஆனால் ஐயர் சொன்னது போலவே, அதே நாளில், அதே நேரத்தில், ராஜேஷின் வீட்டில் பெரிய அளவில் தீ விபத்து நடக்கிறது. உடனடியாகத் தீ அணைக்கப்பட்டு வீடு பாதுகாக்கப்படுகிறது.

அதிர்ச்சி அடைந்த ராஜேஷ், இதுபற்றி விரிவாக அறிய மீண்டும் ஐயரைச் சந்தித்து ”நடந்தது எப்படி, அதை எப்படி அவரால் சரியாகக் கணிக்க முடிந்தது?” என்று விசாரிக்கிறார். அதற்கு ஐயர், ”அந்த நேரத்தில் சனி வக்கிரமாகிறது. அது உங்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் கிரகம். அதுதான் காரணம்” என்கிறார்.

ராஜேஷ் மறு நாள் பிர்லா கோளரங்கத்துக்குச் சென்று சனி கிரகம் வக்கிரமாவதைக் கண்டு வியந்திருக்கிறார். ஜோதிடம் என்பது கணிதம் சார்ந்தது என்ற உண்மையை உணர்ந்து கொள்கிறார்.

இப்படிப் பல சம்பவங்கள் நூலில் இருக்கின்றன.

இன்றைக்கு இருக்கும் பல ஜோதிடர்களைவிட ஜோதிடத்தில் நுண்மான் நுழைபுலமும் பரந்து பட்ட அறிவும் உடையவர் ராஜேஷ்.. ஜோதிடம் ஒரு அறிவியலா, கலையா, கணித சாஸ்திரமா, மெய்ஞ்ஞானத்தைச் சேர்ந்ததா, விஞ்ஞானமா, புள்ளியியல் சம்பந்தப்பட்டதா இல்லை புரியாத புதிர் தானா என்ற கேள்விக்கெல்லாம் ராஜேஷின் இந்த நூலில் விடையிருக்கிறது. அவருடன் பழகி அவரது அறிவுத் திறம் கண்டு வியந்தவன் என்ற முறையில் நிச்சயம் இந்த நூல் பலரது அகக் கண்களைத் திறக்கும்; புதிய தரிசனம் கிடைக்கும் என்பது நிச்சயம். ஜோதிடம் மட்டுமல்லாமல் பிரபஞ்ச ரகசியம், காலம், அமானுஷ்யம் என்று பலதுறைகளிலும் அவர் செய்திருக்கும் ஆய்வுகளை மக்கள் முன் கொண்டுவர வேண்டும்.

நூல் கிடைக்குமிடம் :

கற்பகம் புத்தகாலயம்,
4/2, சுந்தரம் தெரு,
தி.நகர், சென்னை 600 017.

http://www.dialforbooks.in/ மூலம் ஆன்லைனிலும் இந்தப் புத்தகத்தை வாங்கலாம்.

***

License

Share This Book