9 ஏ.நடராஜனின் “மோகவில்”

இசையையும், பாத்திரங்களின் மன உணர்ச்சியையும் மையமாக வைத்து ’மோகமுள்’ என்னும் காவியத்தைப் படைத்தார் அன்று தி.ஜானகிராமன். இன்று அதே உணர்ச்சிகளையும், இசையையும் மையமாக வைத்து ’மோகவில்’ தந்திருக்கிறார் ஏ.நடராஜன்.

சென்னைத் தொலைக்காட்சியின் மேனாள் இயக்குநரான ஏ. நடராஜன் அவர்கள் நல்ல பேச்சாளர், சிறந்த கட்டுரையாளர், நல்ல பல சிறுகதைகளின் ஆசிரியர் என்பது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால், தான் ஒரு சிறந்த நாவலாசிரியரும் கூட என்பதை இந்நாவலின் மூலம் நிரூபித்திருக்கிறார் அவர். தினமலர்-வாரமலரில் தொடராக வெளிவந்து லட்சக்கணக்கான வாசகர்களால் படிக்கப்பட்டுப் பாராட்டப்பட்ட ’மோகவில்’ தொடர்கதை தற்போது புத்தகமாக வெளிவந்திருக்கிறது (கவிதா பப்ளிகேஷன்ஸ் வெளியீடு). இது அவரது முதல் நாவலும் கூட.

நாவலின் கதை அமெரிக்காவிலும், இந்தியாவிலும் மாறி மாறிப் பயணிக்கிறது. க்ளீவ்லேண்ட் இசை விழாவில் ஆரம்பித்து மறு வருடம் அதே இசை விழாவிலேயே நிறைவடைகிறது. கதையின் நாயகன் கணேஷ் புகழ்பெற்ற வயலின் இசைக் கலைஞன். அவனது திறமையைக் கண்டு பல இளம்பெண்கள் அவனுக்கு ரசிகைகளாகின்றனர். ஆனால் அவன் காதல் கொள்வதோ தீபிகா மீது. க்ளீவ்லாண்டின் கம்ஃபர்ட் இன் ஹோட்டலில் ரிசப்ஷனிஸ்ட்டாக இருக்கும் தீபிகா, டாக்டர் யசோதாவின் ஒரே செல்ல மகள். அமெரிக்க மண்ணில் பிறந்திருந்தாலும், இந்திய கலாசாரத்தின் மீது பெருமதிப்பும் ஈர்ப்பும் கொண்டவள். நல்ல இசை ரசிகை. முதல் சந்திப்பிலேயே கணேஷை ஈர்க்கிறாள் அவள். தொடர் சந்திப்புகள் காதலாக மாறுகின்றது.

ஆனால் தீபிகாவின் அம்மா யசோதா இந்தக் காதலுக்குத் தடை போடுகிறாள். அவள் வாழ்வில் பெற்ற கசப்பான அனுபவமும், கணேஷின் மீது ஏற்படும் இனம் புரியாததோர் வெறுப்பும் அதற்குக் காரணமாகிறது. ஆனால் கணேஷின் மனது அதை வேறு விதமாகச் சிந்திக்கிறது. அவனது ஈகோவுக்கு விடப்பட்ட சவாலாகவே அவன் அதை நினைக்கிறான். யசோதாவை மீறி எப்படியாவது தீபிகாவை அடைய விழைகிறான். கலிபோர்னியாவில் நடக்கும் இசைக் கச்சேரியில், மேடையிலேயே தீபிகாவை தன் ’வருங்கால மனைவி’ என்று அறிமுகப்படுத்துகிறான். மறுநாள் செய்தித்தாளில் புகைப்படத்துடன் அதுபற்றிய செய்தி வெளியாகிறது. அது கண்டு கோபிக்கும் தீபிகாவை தனது கவர்ச்சியான பேச்சினால் மயக்குகிறான் கணேஷ். அவனை முற்றிலும் நம்பி அவன் மீது தீவிரமாகக் காதல் வயப்படுகிறாள் தீபிகா. தாயின் எதிர்ப்பையும் மீறி அவனை மணக்கச் சம்மதிக்கிறாள். பிட்ஸ்பர்க் வெங்கடாஜலபதி ஆலயத்தில் அவர்கள் திருமணம் நடக்கிறது.

இந்தியாவிற்குத் திரும்பி இல்லற வாழ்க்கையில் ஈடுபடுகின்றனர் இருவரும். நாளடைவில் தீபிகாவிற்கும் வயலின் வாசிக்கத் தெரியும் என்ற உண்மை கணேஷிற்கு அதிர்ச்சியைத் தருகிறது. கணேஷின் குரு தீபிகாவின் இசையார்வத்தையும், திறமையையும் கண்டு பாராட்டுகிறார். அவளை வயலினின் சில நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டு, கணேஷுடன் இணைந்து தம்பதியாக கச்சேரி செய்யுமாறு கூறுகிறார். அதன்படி தான் செய்யும் முதல் கச்சேரியிலேயே ரசிகர்களை ஈர்க்கிறாள் தீபிகா. இந்தியா முழுவதிலிருந்தும் இருவருக்கும் தொடர்ந்து கச்சேரி வாய்ப்புகள் வருகின்றன. நாளடைவில் அவளுக்குக் கிடைக்கும் புகழையும், முக்கியத்துவத்தையும் கண்டு பொறாமையும் எரிச்சலும் அடைகிறான் கணேஷ். தன்னை விட அவள் அதிக முக்கியத்துவம் பெற்று விடுவாளோ என்று எண்ணிய அவனது ’ஈகோ’வால் அவள் மீதான பொறாமையும் கோபமும் முன்னிலும் தீவிரமாகிறது. தீபிகாவின் இல்லற வாழ்வில் புயல் வீசுகிறது. அவன் குத்தல் பேச்சுக்களுக்கும், கிண்டல்களுக்கும் தான் பூஞ்சையானும் கோழை அல்ல என்று பதிலடி கொடுக்கிறாள் தீபிகா. நாளடைவில் கணேஷின் ஈகோவே மணமுறிவிற்கும் காரணமாகிறது.

தீபிகாவை நிரந்தரமாகப் பிரிந்து விட முடிவு செய்கிறான் கணேஷ். தாங்கள் இருவரும் சேர்ந்து கச்சேரி செய்ய இருக்கும் க்ளீவ்லாண்ட் இசை விழாவில் அதுபற்றிய தனது முடிவை அறிவிக்க நினைக்கிறான். தீபிகாவால் எதையும் மறுத்துப் பேச முடியாதபடி சூழல் அமைகிறது. க்ளீவ்லாண்டில் அனைவரும் எழுந்து நின்று பாராட்டுமளவுக்கு மிக அற்புதமாகக் கச்சேரி நடக்கிறது. கச்சேரி முடிந்ததும் அறிவிப்பை வெளியிட எழுந்து நிற்கிறான் கணேஷ். அப்போது திடீரென யாரும் எதிர்பாராதபடி மயங்கி விழுகிறாள் தீபிகா.

அவளுக்கு என்ன ஆயிற்று, அவர்கள் பிரிந்தார்களா இல்லையா, கணேஷ் எடுத்த முடிவு என்ன, யசோதாவின் மணம் மாறியதா இல்லையா போன்ற விஷயங்களை தனக்கேயுரிய சிறப்பான சம்பவக் கோர்வைகள் மூலமும், அழகான வர்ணனைகள் மூலமும் நகர்த்திச் செல்கிறார் ஏ. நடராஜன்.

சுவையான நாற்பது அத்தியாயங்கள் கொண்ட இந்த நாவலில் சிருங்கார ரசம் சற்றே அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும். கூந்தல், புடவை, ஆடை, அலங்காரங்கள் என நாயகியை விதவிதமாக வர்ணிக்கும் விதத்தில் சாண்டில்யனையும் மிஞ்சி விடுகிறார் கதாசிரியர். அதுவும் புடவை, அதன் நிறம், அதிலுள்ள வேலைப்பாடு, அதன் மடிப்புகள், கதாநாயகி அதை உடுத்தியிருக்கும் நேர்த்தி என்று வர்ணிக்கும் விதத்தில், அந்தப் பாத்திரத்தையே கொண்டு வந்து கண் முன் நிறுத்துகிறார் என்றால் அது மிகையில்லை.

கோபம், மோகம், இனம் புரியாத பரபரப்பு, உருக்கம் என எல்லாம் கொண்ட கலவையாக கணேஷின் பாத்திரம் படைக்கப்பட்டுள்ளது. பாராட்டுவதற்காகக் கூட தன் மனைவியின் கையை ஒருவன் தொடக் கூடாது என்று அதிக பொஸசிவ்னெஸ் எண்ணம் கொண்டவனாகவும், சட்டென்று எதற்கும் கோபப்பட்டு, உணர்ச்சி வசப்படுபவனாகவும் ஒரு மத்திய தர சராசரி எண்ணம் கொண்ட இளைஞனைப் போலவே படைக்கப்பட்டிருக்கிறது கணேஷின் பாத்திரம். படிப்பவர்களுக்கு நாயகியின் மீது இனம் புரியாத ஈர்ப்பு ஏற்படும்படி தீபிகா பாத்திரத்தைப் உருவாக்கியிருப்பதுடன், அடுக்கடுக்கான சம்பவங்களால் மிக நேர்த்தியாக, விறுவிறுப்பாகக் கதையை நகர்த்திச் செல்கிறார் நடராஜன். பாசமும், கண்டிப்பும் நிறைந்த தாயாராக யசோதாவின் பாத்திரம். தனக்குச் சொல்லாமல் திருமணம் செய்து கொண்டு விட்ட மகள் மேல் கோபம் இருந்தாலும், அவளின் நலன் மீது இறுதிவரை அக்கறை கொண்டவளாக, அன்புள்ளம் கொண்ட தாயாக மிக நேர்த்தியாகப் படைக்கப்பட்டிருக்கிறது. தீபிகாவின் அழகு குறித்த வர்ணனைகளும், கணேஷ்-தீபிகாவின் அன்பான உரையாடல்களும் நாவலுக்கு மேலும் சுவை கூட்டுகிறது.

தமிழ்வாணன் நாவல்களில் அவரே ஒரு பாத்திரமாக வருவார். இங்கே நடராஜனின் நண்பர் க்ளீவ்லாண்ட் சுந்தரம் அது போன்று வருகிறார். க்ளீவ்லாண்டில் தியாகராஜ ஆராதனை விழாவை மிக அற்புதமாக நடத்திவரும் சுந்தரம் இங்கே ஒரு முக்கியமான கதாபாத்திரமாக வருகிறார். சொல்லப் போனால் மோகனமாக நாவலை ஆரம்பித்து, பூபாளமாக ஒருவிதத்தில் முடித்து வைப்பது கூட அவர்தான்.

தொடர்கதையாக வெளிவந்தவற்றை முழு நாவல் வடிவில் படிக்கும் போது, அது அவ்வளவு சுவாரஸ்மாய் இருக்காது என்ற கருத்தை உடைத்தெறிந்திருக்கிறார் நடராஜன். மொத்தத்தில் எடுத்தால் கீழே வைத்துவிட முடியாதபடி வெகு சுவையாகப் படைக்கப்பட்டிருக்கும் நாவல் – மோகவில்.

நூலை வாங்க :
Kavitha Publication
8, Masilamani Road,
PondyBazaar, T Nagar,
Chennai – 600017
Phone:044 2432 2177

இணையத்தில் வாங்க – https://www.nhm.in/shop/1000000000873.html

http://www.noolulagam.com/product/?pid=22437

http://newbooklands.com/new/home.php

***

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *